பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டு களாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதே போல, 1 - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.
இதனால், பிளஸ் 2முடிக்கும் மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல், உயர் கல்வி வாய்ப்புகளை இழக்கின்றனர். பாடத்திட்டத்தை மாற்ற, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், பாலகுருசாமி ஆகியோர் அடங்கிய, உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கலைத்திட்ட குழுவும் அமைக்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன.
இது தொடர்பாக, தமிழகத்தில், நான்கு முக்கிய நகரங்களில், பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. ஆனால், உயர் கல்வியில் முக்கிய அங்கம் வகிக்கும் மருத்துவத் துறையினர், கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டக் கல்லுாரி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. இந்த குறையை தீர்க்க, இ - மெயில் மற்றும், 'ஆன் - லைன்' வாயிலாக, கருத்து கூறும் வசதியை, உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இணையதளத்தில், இதற்காக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
'அதில் பயனீட்டாளர் குறியீட்டு எண் வழங்கி, ஒவ்வொருவரின் கருத்துக்களை, மின்னணு கோப்பாகவோ அல்லது பதிவாகவோ பெற வேண்டும்' என, பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக