செவ்வாய், 31 அக்டோபர், 2017

பார்வையற்ற மாணவர்களுக்காக 'டெய்சி' செயலி! பாடங்களை வாசித்துக் காட்டுவதால் மகிழ்ச்சி.

பொதுத்தேர்வு எழுதும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, பாடப்புத்தகங்களை வாசித்து காட்டும், 'டெய்சி' என்ற செயலியை, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட, பயிற்சி வகுப்பில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர். எம்.எஸ்.ஏ.,) சார்பில், மாற் றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் விதம் குறித்து, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி, ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.இதில், 'காக்னிஷன், சாம்சங்' நிறுவனங்கள் மற்றும் 'புக் ஷேர்' தன்னார்வ அமைப்பு இணைந்து, மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்க உதவும், 'டெய்சி' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளன. 

இச்செயலியை பயன்படுத்துவதற்கு ஏதுவாக, 81 ஆயிரம் ரூபாய் மதிப்பில்,ஒன்பது செல்போன்கள், சிறப்பாசிரியர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சியில், 13 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். வட்டாரம் வாரியாக, சிறப்பாசிரியர்கள் உதவியோடு மாணவர்களுக்கு, இச்செயலியை பயன்படுத்தி படிக்கும் முறை குறித்து, சொல்லி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் கண்ணன் கூறியதாவது: டெய்சி என்ற செயலியை, ஆன்டிராய்டு மொபைலில் பதிவிறக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில், 'கே ரீட்' அப்ளிகேஷன் சென்று, 'டெக்ஸ்ட் டூ ரீட்' என்பதை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான, 55 பாடப்புத்தகங்கள் உள்ளன.இச்செயலியில், பாடம், பக்கம் வாரியாக தேர்வு செய்தால், வாசித்துக் காட்டும். அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்லவும், வேறு பத்திகளை படிக்கவும், வசதி உள்ளது. 

கையாள எளிதாக இருப்பதால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது. முதற்கட்டமாக, செயலியுடன் கூடிய, ஒன்பது மொபைல்போன்கள் சிறப்பாசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக