செவ்வாய், 24 அக்டோபர், 2017

முதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு

முதுநிலை, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும், ஜன.,7ல், ஒரே நாளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிக்கவும்; பி.டி.எஸ்., படித்தவர்கள், எம்.டி.எஸ்., படிக்கவும், மத்திய அரசின் முதுநிலை, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோருக்கான, 'நீட்' தேர்வு தேதியை, தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, '2018, ஜன., 7ல், கணினி வழி தேர்வாக, முதுநிலை, 'நீட்' மற்றும், எம்.டி.எஸ்., 'நீட்' தேர்வுகள் நடக்கும்; தேர்வு முடிவுகள், ஜன., 31ல் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இந்த தேர்வு, நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது.

அதேபோல், அனைவருக்கும் ஒரே வினாத்தாள் இடம் பெறும். 'மாடரேட்டிங்' என்ற மதிப்பெண் சமப்படுத்தும் முறை எதுவும் கிடையாது. ஒவ்வொரு கேள்வியின் சரியான பதிலுக்கும், நான்கு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு கேள்வியின் தவறான பதிலுக்கும், தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். முயற்சிக்காத கேள்விக்கு, எந்த மதிப்பெண்ணும் கிடையாது.

முதுநிலை, 'நீட்' தேர்வு, 2016 வரை, நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக, எட்டு நாட்கள் நடத்தப்பட்டது. ஆனால், வரும் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும் ஒரே வினாத்தாள், ஒரே நாள் என, தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு, http://nbe.edu.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


ஆதார் எண் கட்டாயம் : முதுநிலை, 'நீட்' தேர்வில் பங்கேற்க, nbe.edu.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு மேற்கொள்ள வேண்டும். அப்போது, தேர்வரின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம். ஆதார் எண் இல்லாதோர், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். விண்ணப்ப பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, தேசிய தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக