புதன், 25 அக்டோபர், 2017

கட்டட உறுதி சான்று : பள்ளிகளுக்கு எச்சரிக்கை.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், கட்டட உறுதி சான்று இல்லாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 24 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

இவற்றை தவிர, 5,000 தொடக்கப் பள்ளிகள், 1,500 நடுநிலைப் பள்ளிகள், அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகளாக உள்ளன. இதில், அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகளில், கட்டடங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக, தொடக்கக் கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளன. 

வடகிழக்கு பருவ மழை வருவதால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, விபத்தை தடுக்கும் வகையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார் மேகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்ற இன்ஜினியர்கள் வாயிலாக, கட்டடத்தை ஆய்வு செய்து, கட்டடத்தின் உறுதி தன்மையை முடிவு செய்ய வேண்டும். 'கட்டட உறுதி சான்றிதழ் பெற்று, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆய்வை துவக்கியுள்ளனர். 'கட்டட உறுதி சான்றிதழ் தராத, பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக