'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.
'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது.
இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.
வழிகாட்டுதல்கள்
பின், தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.
பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும். வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு அரையாண்டு தேர்வு
தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக