புதன், 25 அக்டோபர், 2017

போட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில் புத்தக பதிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அரிய புத்தகங்களை பெறும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:–

இலங்கை யாழ்ப்பாணத்தில் இறுதிப்போர் நடந்தபோது அங்கிருந்த நூலகம் அழிந்துவிட்டது. எனவே யாழ்ப்பாணம் உள்பட உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் உள்ள நூலகங்களுக்கு அரிய வகை புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அனுப்பப்படும். மலேசியா போன்ற நாடுகளுக்கு தமிழ் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அங்குள்ள தமிழர்களுக்கு தமிழை கற்பிக்க சிறந்த தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை பெறப்பட்டு அனுப்பப்படுவார்கள்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள ஏதுவாக பள்ளிகளில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் பயிற்சி பெற மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த பயிற்சியில் சேருவதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரம் வரை நீட்டிக்கப்படுகிறது.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஜெகந்நாதன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குனர் கார்மேகம், முறைசாரா பள்ளிகள் இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் இயக்குனர் அ.கருப்பசாமி, விஜயகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விருகை ரவி, சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குனர் ச.கண்ணப்பன் வரவேற்றுப்பேசினார். முடிவில் துணை இயக்குனர் வை.குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக