திங்கள், 30 அக்டோபர், 2017

சென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்.

சென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது. சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற தரமதிப்பீட்டு முறை, நடைமுறையில் உள்ளது. ஆனால், பள்ளிகள், கல்லுாரிகளில் தர மதிப்பீட்டு முறை மாறி, தற்போது, கிரேடிங் முறை அறிமுகமாகி உள்ளது.

இந்த முறையால், மாணவர்களிடையே மதிப்பெண் பாரபட்சம் மற்றும் வேறுபாடுகள் நீங்கும். மேலும், மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களுக்கு ஏற்படும், மன அழுத்தமும் குறையும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர். எனவே, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., வழிகாட்டு நெறிமுறைகள், 2014ன் படி, சென்னை பல்கலையில், கிரேடிங் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை, செனட் கூட்டத்தில், பல்கலை துணைவேந்தர், துரைசாமி அறிவித்துள்ளார். 
இதன்படி, எதிர்காலத்தில் ஒன்பது வகை கிரேடுகள் அறிமுகம் செய்யப்படும். ஆங்கிலத்தில், 'ஓ' கிரேடுக்கு, 10 புள்ளிகள்; ஏ பிளஸ், 9; ஏ, 8; பி பிளஸ், 7; பி, 6; சி, 5; பி, 4; எப், 0 ஏபி,0 என, கிரேடிங் முறை அறிமுகமாக உள்ளது. சென்னை பல்கலை, இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறை, முக்கிய பாடம் தொடர்பான விருப்ப பாடத்திட்டம், ஆன்லைன் படிப்புகள், தொலைநிலை கல்வியிலும், சி.பி.சி.எஸ்., என்ற விருப்ப பாட கிரேடிங் முறை என, பல, புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, துணைவேந்தர் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக