திங்கள், 30 அக்டோபர், 2017

ஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்.

ஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து, ஆதார் பதிவுகளை, அரசு ஊழியர் ஒருவர், தன் விரல் ரேகையை பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், மக்களிடம், 'பயோமெட்ரிக்' முறையில் தகவல்களை பெற்று, பதிவு செய்தல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை, தனியார் ஏஜன்சிகள் மூலம் செய்து வருகிறது. இவை, தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வருவதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன.


இதையடுத்து, அனைத்து ஆதார் பதிவு மையங்களையும், மத்திய, மாநில அரசு கட்டடங்கள், வங்கிகளின் கட்டடங்களுக்கு மாற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மற்றொரு பாதுகாப்பு நடவடிக்கையாக, மக்களின் ஆதார் தகவல்களை பதிவு செய்யும்போது, அவற்றை, ஆதார் பதிவு மையம் அமைந்துள்ள, அரசு அலுவலகத்தை சேர்ந்த ஒரு ஊழியர், தன் விரல் ரேகையை, பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, அனைத்து வங்கிகளும், தலா, 10 கிளைகளில் ஒன்றில், ஆதார் பதிவு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் தகவல்களில் திருத்தம் செய்யும் பணிகளை, வங்கிகள், தபால் நிலையங்கள், அரசு அலுவலக வளாகங்களில், பெரும்பாலும் மேற்கொள்ள, அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக