ஞாயிறு, 29 அக்டோபர், 2017

நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த  ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். 

குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல்  செய்திருந்தார். அதில் ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் 1986ல் ஜவஹர்  நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.

உண்டு உறைவிட பள்ளியான இப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.  இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.  எனவே, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். 
இம்மனு விசாரணையின்போது, நவோதயா பள்ளிகள் தரப்பில் ‘நவோதயா பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்பில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளது. 

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் முதன்மைப்  பாடமாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படும்’ என தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணையின் இறுதியில்  நீதிபதிகள் வழங்கிய உத்தரவில் ‘நவோதயா பள்ளிகள் வந்தால் இந்தி திணிக்கப்படும் என கருதப்பட்டதால், தமிழகத்தில் இப்பள்ளிகளுக்கு அனுமதி  வழங்கப்படாமல் இருந்தது. 

தற்போது 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ் விருப்பப் பாடமாக  இருக்கும் என்றும் நவோதயா வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு இடம் உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களிலும் சேர்த்து 660 நவோதயா பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு மாணவர்  சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு நவம்பர் மாதம் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் ஒரு மாத காலம் கூட  இல்லாத நிலையில் அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களில் இருந்து மட்டுமே 6 ம் வகுப்பு தகுதியானவர்களை தேர்வு செய்ய பிப்ரவரி மாதம்  நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 

ஜவஹர் நவோதயா வித்யாலயா தரப்பில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில்  இவ்விஷயத்தில் தமிழக அரசு மவுனமாக இருந்து வருவதால் பெற்றோர் மத்தியில் குழப்பமான நிலை உள்ளது.

 இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த குமரி மகாசபா அமைப்பின் தலைவர் ராவின்சன் கூறுகையில், ‘குமரி மகா சபா சார்பில் தமிழகத்தில் நவோதயா  வித்யாலயா தொடங்க மதுரை உயர்நீதிமன்ற கிளையிடம் இருந்து உத்தரவை பெற்றுள்ளோம். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால்  இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாமல் போய்விடும். மாவட்டம் தோறும் மாணவர் சேர்க்கைக்கு வசதிகளை ஏற்படுத்தி தற்காலிக  கட்டிட வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக