ஞாயிறு, 16 ஜூலை, 2017

சமூக நீதி காவலர் வி.பி.சிங் !

இந்திய அரசியல் வானில் மாற்றங்கள் ஏற்படுத்திய சமூகநீதி காவலராக போற்றப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் அரசியல் வாழ்வு குறித்து சுருக்கமாக அறிவோம்...

"இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீடு 1993-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த போதிலும், மத்திய அரசின் சில துறைகளில் ‘ஏ’ பிரிவில் ஒருவர்கூட பணியில் இல்லை. அனைத்துத் துறைகளிலும் பார்த்தால் 0% முதல் 10% பேர் மட்டும் உள்ளனர்."


மத்திய அரசின் கீழ் நடைபெறும் பல கல்வி நிறுவனங்கள் இதுவரையிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ-மாணவியருக்கு முழுமையாக இடஒதுக்கீடு வழங்கவில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் இந்திய ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதுவரை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை."

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் கார்வேந்தன் 2015-இல் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் பகுதிகள் இவை. புத்தாயிரம் ஆண்டுகளுக்கு பின்னான காலத்திலேயே பிற்படுத்தப்பட்டோர் நிலை இதுவெனில் அதற்கு முன்பான நிலை குறித்து கேட்கவே தேவையில்லை.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்திய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, சமூக ஓட்டத்தில் அவர்களையும்  கைதூக்கி விட வேண்டும் என்பதற்காக பதவி துறந்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அவரின் பிறந்த தினம் இன்று!.

யார் இந்த வி.பி.சிங்?:

1931இல் இன்றைய தினத்தில் அலகாபாத் நகரில் பிறந்த விஸ்வநாதன் பிரதாப்சிங் எனும் வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்த தையா சமஸ்தான மன்னர் ஆவார். வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது மண்டா நகர மன்னர் ராவ்பகதூர் அவரை தனது வாரிசாகத் தத்தெடுத்துக் கொண்டார். 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அணு விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆவலோடு 1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி பட்டப் படிப்பை முடித்த வி.பி.சிங் பின்னர் தீவிர அரசியலில் குதித்தார். மகாத்மா காந்தியின் அரசியல் வாரிசாக அடையாளம் காணப்பட்ட வினோபாவேயின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டு, தனது சொந்த நிலத்தையே இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார் வி.பி.சிங்.

வி.பி.சிங்கின் அரசியல் பிரவேசம்:

1969இல் உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை உறுப்பினரான வி.பி.சிங் - விரைவிலேயே - 1974இல் இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திராகாந்தியின் அமைச்சரவையில் இடம் பிடித்தார். சில ஆண்டுகளில் மாநில அரசியலுக்கு திரும்பியவர் உத்தரபிரதேச முதலமைச்சராக பணியாற்றினார். தனது அண்ணன் கொல்லப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியை துறந்த வி.பி.சிங், இந்திராகாந்தி மறைவுக்கு பின் ராஜிவ்காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றினார்.


அமைச்சராய் துணிகர நடவடிக்கைகள்:

திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் ஆகியோருக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.சிங்கிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1987இல் போபர்ஸ் ஊழல் தொடர்பான செய்தி ஸ்வீடன் வானொலியில் வெளியான போது அது குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார். இதனால், ராஜிவ்காந்திக்கும் அவருக்கும் இடையே கசப்பான சூழல் உருவானது. அமைச்சரவையில் இருந்து வி.பி.சிங் நீக்கப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்டவற்றை துறந்து, ஜனமோர்ச்சா கட்சியை தொடங்கினார்.

பிரதமராக வி.பி.சிங்:

ராஜிவ்காந்திக்கு எதிராக திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேசிய முன்னணியை உருவாக்கிய  வி.பி.சிங் 1989 தேர்தலில் அதிக இடங்களையும் கைப்பற்றினார். எனினும், பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக, இடதுசாரிகள் எனும் இரு துருவங்களின் ஆதரவையும் திரட்டி ஆட்சி கட்டில் ஏறினார்.

1989 டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் ஜாட் இன தலைவரான தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் வி.பி.சிங். பரிந்துரையை ஏற்க மறுத்த தேவிலால், வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார்.

மண்டல் கமிஷன் அறிக்கை:

1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியல் அரசிடம் இல்லை. அதற்காக, அண்ணல் அம்பேத்கர் ஆலோசனையின்படி, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை அடையாளம் காண ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 340-ல் தெளிவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978-ல் பி.பீ. மண்டல் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திப் பல தரப்பினரையும், மாநில அரசுகளையும் விசாரித்து 1980 டிசம்பர் 31-ல் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் 3,743 சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோராக அடையாளம் காண்பித்தது மண்டல் கமிஷன்.

மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம்:

10 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டல் கமிஷன் அறிக்கையை அப்போதைய காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்களுடனான தொடர்பால் வி.பி.சிங் இடஒதுக்கீட்டு கொள்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மண்டல் கமிஷன் அறிக்கையை அமலாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டார். மண்டல் கமிஷன் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களை நேரில் சென்று சந்தித்து நன்றி கூறினார்.

மண்டல் கமிஷன் அறிக்கைக்கு பாஜக எதிர்ப்பு:

மண்டல் கமிஷன் அமலாக்கத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தது. அதே காலக்கட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் அத்வானி ரத யாத்திரை தொடங்கி கைதானார். இதனை அடுத்து, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.

பிரதமர் பதவியை இழந்தார் வி.பி.சிங்:

பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது வி.பி.சிங் பேசிய பேச்சு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ”பெரியாருக்கும், அம்பேத்கருக்கும்” நன்றி கூறிதான் தனது பேச்சையே வி.பி.சிங் தொடங்கினார். இங்கு வாக்கெடுப்பில் இரண்டு அணிகள் உள்ளன. ஒன்று சமூக நீதி வேண்டும் என்று சொல்கின்ற அணி; இன்னொன்று வேண்டாம் என்று சொல்கின்ற அணி. நான் சமூக நீதி வேண்டும் என்பதை முன்வைத்து நம்பிக்கை வாக்கு கேட்கிறேன். இதன் மூலம் சமூக நீதி வேண்டும் என்பவர்கள் யார் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று உணர்ச்சிவசமாக வி.பி.சிங் பேசினார். மேலும், ‘பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என்று அன்றைய தினம் அவர் பேசினார். மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராஜிவ்காந்தி 10 மணி நேரங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, பிரதமர் பதவியில் ஓராண்டை நிறைவு செய்வதற்கு 16 நாட்களுக்கு முன்பாகவே 1990 நவம்பர் 10ம் தேதி வி.பி.சிங், பதவியை இழந்தார்.

பிரதமர் பதவியில் சில சாதனைகள்:

மண்டல் கமிஷன் அமலாக்கம் மட்டும் அல்லாமல், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கு "பாரத ரத்னா" பட்டம் வி.பி.சிங் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது.  நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும்.

ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றவர் வி.பி.சிங். 1990 மே மாதம் சென்னை வந்திருந்த வி.பி.சிங்கிடம் செய்தியாளர்கள் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது பாக்கெட்டில் இல்லை” என பதிலளித்திருந்தார்.

இறுதிக்கால அரசியல் பயணம்:

1996-ல் ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைய முக்கிய பங்காற்றிய வி.பி.சிங்கையே மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும்படி கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கேட்டுக் கொண்ட போதும் அதனை ஏற்க மறுத்து, தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர் பதவியில் அமர முக்கியப் பங்கு வகித்தார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்த வி.பி.சிங், 2006-ல் ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரியில், ரிலையன்ஸ் நிறுவனம் விவசாய நிலங்களை கைப்பற்றியதைக் கண்டித்து நடைபெற்ற தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். ரத்த புற்றுநோயுடன், வாட்டி வதைக்கும் சிறுநீரகக் கோளாறும் சேர்ந்துகொண்டதால், 2008ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி சமூக நீதி காவலனாக போற்றப்படும் வி.பி.சிங் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக