வியாழன், 16 நவம்பர், 2017

கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.


# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?

தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?

இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

# கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம். வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.8

# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

# கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?

காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

# என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?

அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

# என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?

தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

# கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,

தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

# திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

# மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

-thanks -- வழக்கறிஞர் பாண்டியன்
தமிழக அறப்போர் இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக