வெள்ளி, 17 நவம்பர், 2017

நீதிபதி கிருபாகரனை விமர்சித்த 11 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்.

கடந்த செப்டம்பர் மாதம் 7–ந்தேதி முதல் தமிழகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல், சில கேள்விகளை எழுப்பி உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

நீதிபதியின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்தனர். விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல்கள் செந்தில்குமார், சங்கரன், சூரியபிரகாசம் ஆகியோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ‘எந்த உத்தரவு போட்டாலும் விமர்சிக்க வேண்டும் என்றே சிலர் இருக்கின்றனர். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்ன? என்று புரிந்து கொள்ளாமல், தங்கள் பேச்சு சமூகத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் பேசுகின்றனர்’ என்றார்.
அதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கின் மீதான விசாரணையில், சமூக வலைத்தளங்களில் வேண்டாத கருத்துகளை பதிவு செய்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் 11 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விவரம் வருமாறு:–
மாயகிருஷ்ணன்(தேவியாக்குறிச்சி), பாலகிருஷ்ணன்(அனியாபுரம்), ஜான் பிரேம்குமார்(கொளத்தூர்), கவிதா(ஏலகிரி), ரமேஷ்(மோகனூர்), கோவிந்தன் (அழகாபுரம்), செல்வன்(செவந்திப்பட்டி), பக்தவச்சலம்(சென்னை), பொன்ரத்தினம்(தர்மபுரி), திருக்குமரன்(காரியாமங்கலம்) மற்றும் சொர்ணலதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக