வியாழன், 5 அக்டோபர், 2017

7 th PAY COMMISSION - அரசு ஊழியர்களுக்கான உண்மையான ஊதியம் எவ்வளவு - விகடன் ஊதிய விகித முழு கணக்கீடு.



ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், 
செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும். 
ஆண்டுதோறும் ஊதியம், ஆண்டுக்கு இருமுறை உயரும் அகவிலைப்படியால்  ஊதியமானது அதிகரித்துக்கொண்டு போகும் என்றாலும் ‘ஊதிய மேம்பாடு’ தருவது ஊதியக்குழு பரிந்துரையால்தான். ஏனென்றால், ஓர் ஊதியக் குழுவுக்கும், அதற்கடுத்த ஊதியக் குழுவுக்குமான பத்தாண்டு கால இடைவெளியில் தரப்படும் அகவிலைப்படி மொத்தத்தையும் அடிப்படை ஊதியமாக (Basic Pay) அங்கீகரித்துத் தருவது ஊதியக்குழுதான். இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஊதியத்தைத்தான் ‘உண்மை ஊதியம்’ (Real Pay) என்று குறிப்பிடுகிறது ஏழாவது ஊதியக்குழு. இதற்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு தரவே அகவிலைப்படி உயர்வு அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

நான்கு அம்சங்கள்

அரசு இயந்திரம் சிறப்பாகச் செயல்பட ஊழியர்களின் ‘திருப்தி’ அவசியம் என்பதால், ஏழாவது ஊதியக்குழு கீழ்க்காணும் நான்கு முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு தனது ஊதிய நிர்ணய பரிந்துரையை அளித்துள்ளது.

1. ஊதியமானது, திறன்மிகுந்த ஊழியர்களை ஈர்த்து, தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ளும் வகையில் போதுமான அளவு இருக்க வேண்டும்.

2. ‘கடுமையாக உழைக்க வேண்டும்’ என்ற உந்துதலை ஊழியரிடையே ஏற்படுத்தக்கூடியதாக  இருக்க வேண்டும்.

3. ஊதியக் கொள்கையானது (Pay Policy) இதர மனிதவள மேலாண்மைச் சீர்திருத்தங்களுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.

4. அமைக்கப்படும் ஊதிய நிலைகள், நாட்டின் நிதிநிலை ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இதன்படி, புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு  இருக்கும்... 1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும், தர ஊதியமும் சேர்ந்தது 100%. அன்றைய தேதியில் தரப்பட்டிருந்த அகவிலைப் படி 125%.  ஊதியம் + அகவிலைப் படியின் கூட்டுத் தொகை 225%. ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரையில் 14.2 சதவிகித உயர்வை வழங்கியுள்ளது. அதன்படி, 225 சதவிகிதத்தில் 14.2% உயர்வு என்பது 32% ஆகும். அப்படியானால் 100+125+32 = 257%. இதுதான் அனைவருக்கும் பொதுவான ஊதிய நிர்ணயமுறை.

இந்த 257 சதவிகிதம்தான் 2.57 மடங்கு எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, 1.1.2016 அன்று பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி, பெருக்கி வரும் தொகையை ரூ.100-ன் மடங்குகளில் அமைத்து, ஊதிய நிர்ணய அட்டவணை ஒன்று அமைந்துள்ளது. இதன்படி நிர்ணயம் செய்யப்படுவதே ‘உண்மை ஊதியம்’ என்று சொல்லப்படும் அடிப்படை ஊதியமாக இருக்கும். 1.1.2016-க்குப் பிறகு தர ஊதியம் கிடையாது.

இவ்வாறு புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்தபிறகு, பணியில் உள்ள ஊழியர்களுக்கு 1.1.2016-க்குப் பிறகு கிடைக்கும் சில பணிப் பலன்கள் பின்வருமாறு இருக்கும்.

ஊதிய உயர்வு

வருடத்துக்கு ஒருமுறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதிய உயர்வானது, 1.1.2016-க்கு முன்பு இருந்த ஊதியம் + தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் மூன்று சதவிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.10-ன் மடங்குகளில் இருந்தது.

01.01.2016-ல் தர ஊதியமானது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதால்,      1.1.2016-க்குப் பிறகு தரப்படும் ஊதிய உயர்வானது அடிப்படை ஊதியத்தில் மூன்று சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.100-ன் மடங்குகளாக இருக்கும். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.22,850 அடிப்படை ஊதியமும் ரூ.5,400 தர ஊதியமும் பெற்றிருந்த ஒரு சிறப்பு நிலை செவிலியருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வு தொகையாக ரூ.850 தரப்பட்டிருக்கும். அதாவது, 22,850+5,400 = 28,250. இதற்கான மூன்று சதவிகித உயர்வு ரூ.850.

இந்தச் சிறப்பு நிலை, செவிலியரின் மொத்த ஊதியமான ரூ.28,250-க்கு நிர்ணயம் செய்யப்படும் புதிய ஊதியம்,  ஊதிய நிர்ணய அட்டவணைப்படி (Pay Matrix) ரூ.73,200-ஆக இருக்கும். எனவே, இவரது வருடாந்திர ஊதிய உயர்வு ரூ.2,200-ல் துவங்கி ரூ.2,300, ரூ.2,400 என ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகும்.

அகவிலைப்படி உயர்வு

31.12.2015 அன்று ரூ.32,400 அடிப்படை ஊதியமும் ரூ.7,600 தர ஊதியமும் பெற்றிருந்த ஓர் அலுவலருக்கு ரூ.40,000-க்கு அகவிலைப் படி கணக்கிடப் பட்டிருக்கும். (32,400+7,600 = 40,000) இவரது புதிய ஊதியம் ரூ.1,02,800-ஆக நிர்ணயம் செய்யப்படும். ஆகையால், இனி இவரது அகவிலைப்படி ரூ.1,02,800-க்குக் கணக்கிடப் படும்.

ஊதிய முன்பணம்

அரசு ஊழியர், ஆசிரியர் முதலானோர் பணிமாறுதல் (Transfer) செய்யப்படும்போது ஒரு மாத அடிப்படை ஊதியத்தை முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதனை மூன்று சம தவணை களில் மூன்று மாதங்களில் திரும்பச் செலுத்தலாம். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.20,900 அடிப்படை ஊதியம் + ரூ4,800 தர ஊதியம் பெற்றிருந்த ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கக்கூடிய முன்பணம் ரூ.25,700-ஆக இருந்திருக்கும். புதிய ஊதிய நிர்ணயத்தின்படி, இவரது அடிப்படை ஊதியம் ரூ.68,000-ஆக உயரும் என்பதால், இவர் ரூ.68,000-யை வட்டி இல்லாத முன்பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். (இந்த ஊதிய முன்பணமானது சொந்த விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கே சென்றாலும் கிடைக்கும்.) மேற்கண்டவை அனைத்தும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவுள்ள, புதிய அடிப்படை ஊதியம் வழங்கவுள்ள மேம்பட்ட பணிப்பலன்களே.

இனி, உண்மை ஊதியமான அடிப்படை ஊதியம் புதிய பணியாளர்களுக்கு எப்படி மேம்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

புதிய ஊழியர்கள்

புதிதாகப் பணிக்கு வருவோர்க்கான தொடக்கநிலை ஊதியம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 01.01.2016-க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேருபவருக்குத் தரப்பட்ட ஊதியம் + தர ஊதியம் + 125% அகவிலைப் படி= 9,300+4,600+17,375 = ரூ.31,275 இது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கத்துக்கு முந்தைய நிலை. ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தபின் பட்டதாரி ஆசிரியர் பெறக் கூடிய ஊதியம், 01.01.2016 அன்று, ரூ.44,900. அதாவது, தொடக்க நிலை அடிப்படை ஊதியம் ரூ.44900, முந்தைய ஊதியமான ரூ.31,275-யைவிட 43.56% அதிகம்.



இந்த 43.56% அடிப்படை ஊதிய உயர்வு என்பது பட்டதாரி ஆசிரியருக்கு மட்டு மன்றி, ரூ.9,300-34,800 என்ற ஊதிய ஏற்றமுறையும் ரூ.4,600 தர ஊதியமும் கொண்ட பழைய ஊதிய நிலைக்கு இணை யாகத் தற்போது மேம்படுத்தப் பட்டுள்ள புதிய ஊதிய நிலையில், நேரடி நியமனம் பெறும் அனைத்துப் பதவிகளுக்கும் பொருந்தும். இன்ன பதவிக்குத்தான் மேம்படுத்தப் பட்ட தொடக்க நிலை ஊதியம் என்றில்லாமல், நேரடி நியமனம் பெறத்தக்க அனைத்து பதவிகளுக்குமே அடிப்படை ஊதியத்தில் 62.22% வரை அதிகரித்த ஊதியத்தைத் தந்துள்ளது (Pay Matrix) ஊதிய நிர்ணய அட்டவணை.

‘மூத்த ஊழியரின் ஊதியம், அதே பதவியில் உள்ள இளைய ஊழியரின் ஊதியத்தைவிட குறைவாக இருக்கக்கூடாது’ என்பது விதிமுறை. இந்த விதிமுறையைப் பயன்படுத்தி சில வருடங்கள் முன்னதாகவே பணிக்கு வந்து, புதிய ஊதியத்தில் குறைவான ஊதியம் பெறுவோர், தமது இளையவரின் ஊதியத்துக்கு இணையாக ஊதியம் பெற முடியும். இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தொடக்கநிலை ஊதியத்தின் பலன், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு வந்த ஊழியர்களுக்கும் போய்ச் சேரும்.

சுருக்கமாகச் சொல்வதானால், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் சிறப்பம்சமே தொடக்க நிலை ஊதிய மேம்பாடுதான். இந்த மேம்பாடானது, தற்போது பணியில் சேரும் ஊழியர்களுக்கு, கால ஓட்டத்தில் நிறைவான பணப்பலனை வழங்கக்கூடும்.  ஊதிய ஏற்றம் கருதி தனியார் துறைக்குச் செல்ல விரும்பும் திறன்மிகு இளைஞர்களை அரசுப் பணிக்குக் கொண்டு வந்துசேர்க்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக