செவ்வாய், 10 அக்டோபர், 2017

டெங்கு: மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை!!!

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


தென் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதற்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தகவலை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில், 300-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று(அக்டோபர் 08) மாலை ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பெரிதாகப் பரவவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட ஒருசில இடங்களில் மட்டுமே டெங்கு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கை வசதி, ரத்த பரிசோதனை செய்ய இயலாத தனியார் மருத்துவமனைகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம்.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகத்திடமும் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்றுக் கொண்டு அவர்களும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளோம். இது வரை 4,716 பேர் இதன் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மற்ற துறையினர் செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடப்பாண்டில் 770 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலி மருத்துவர்கள் எளிதில் தப்பிக்காத வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. போலி மருத்துவர்களைக் கண்டறிவதற்காக மருத்துவ சேவைப்பணிகள் இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக