தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.
ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர்.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக