சனி, 22 ஏப்ரல், 2017

'TET' தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார். 

அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

● டெட் தேர்வில் எந்த குளறு படியும் இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்
● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்
● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்
● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்
● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது
● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக