அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிழக
அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது, தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞர் அய்யாதுரை இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தை முழு வடிவில் அரசாணையாக தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசமும் கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்த அரசாணை நாளை தாக்கல் செய்யப்படும் என அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், மறு உத்தரவு வரும் வரை பத்திரப்பதிவுக்கு தடை என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
வழக்கின் முழு விவரம்: தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விவசாய விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டன. எனவே, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக 'லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என கடந்தாண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தடை விதித்தது.
இந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை. அதேநேரம் அந்தத் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறுவிற்பனை செய்யக்கூடாது. இருப்பினும் தடை உத்தரவில் கொண்டு வரப்பட்ட மாற்றம் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது. மேலும் அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே அதுதொடர்பாக முடிவு செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் கடந்த ஏப்ரல் 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக வரைவு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.
இந்த வரைவு விதிகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், விதிகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படும். ஆகையால், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக