சனி, 20 மே, 2017

விக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... தும்பை!

தும்பைப் பூ சிவனுக்குரிய மலர் என்பதற்கு பக்தி இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
சிவனுக்கு மட்டுமல்ல விநாயகர், துர்க்கை, சரஸ்வதி தேவி போன்றபல தொய்வங்களுக்குபூஜை செய்வதற்கு உகந்த மலராகும். இலக்கியத்தில்,தும்பைப் பூ மாலை அணிந்து சென்றால் போர் உக்கிரம் என்று பொருள்படுமாம். மேலும்,எதிராளியை வசீகரிக்கும் தன்மை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தும்பையின் தாவரவியல் பெயர் LEUCAS ASPERA. இதன் இலை, பூ மற்றும் வேர் மருத்துவக்குணம் நிறைந்தவை. தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத் தும்பை, பேய்த் தும்பை, கழுதைத் தும்பை, கசப்புத் தும்பை, கவிழ் தும்பை மற்றும் மஞ்சள் தும்பை என்று பலவகைகள் உள்ளன. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இது எல்லாவகை மண்ணிலும் வளரும் என்றாலும் மணற்பாங்கான நிலத்தில் விரும்பி வளரக்கூடியது. தமிழகமெங்கும் எல்லாப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணப்படும் இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
தும்பைப் பூவில் உற்பத்தியாகும் தேனைக் குடிப்பதற்காக எறும்புகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் பிற வகைப் பூச்சிகள் காத்துக்கிடக்கும். இன்றைக்கு தேனீ வளர்ப்புத் தொழில் பிரபலமடைந்து வருகிறது. அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முருங்கை, சூரியகாந்தி போன்ற செடிகள் நிறைந்திருக்கும் இடங்களில் தேன் கூடுகளை வைப்பதுபோல தும்பைச்செடிகள் நிறைந்திருக்கும் பகுதிகளிலும் தேன் கூடுகளை வைப்பார்கள். ஏனென்றால் அது அதற்கென்று ஒரு விலை.

முழுத் தாவரமும் இனிப்பு மற்றும் காரச் சுவை, வெப்பத்தன்மை கொண்டது. ஜலதோஷம் வந்தால் தும்பை இலைச்சாறு மூன்று சொட்டு எடுத்து மூக்கால் உறிஞ்சி தும்மினால் தலையில் கோத்திருக்கும் நீர் விலகுவதோடு தலைவலி விலகும். மேலும் இது சளியைக் கட்டுப்படுத்துவதோடு நல்லதொரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. குழந்தைகளுக்கான சளி, இருமல், வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு 10 சொட்டு பூச்சாற்றை காலையில் சாப்பிடக் கொடுத்தால்பலன் கிடைக்கும். பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் சளித்தொல்லை விலகும். அரை டம்ளர் காய்ச்சிய பாலில் 25 பூக்களை ஒரு மணி நேரம் ஊற வைத்து குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்து வந்தால் தொண்டையில் கட்டியிருக்கும் கோழை அகலும். இலைச்சாறு 10 முதல் 15 மி.லி வரை குடித்து வந்தால் ஒவ்வாமை (அலர்ஜி) நீங்கும். இதை 15 நாள்கள்தினமும் காலையில் குடித்து வர வேண்டியது அவசியம். அதிகாலையில் பூவை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும். 50 மி.லி நல்லெண்ணெயில் 50 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி மூக்கில் மூன்று சொட்டு வீதம் 21 நாள்கள் விட்டு வர குறட்டை விடும் பிரச்னை விலகும். பூக்களுடன் ஒரு மிளகு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் முழுச் செடியையும் எடுத்து வந்து நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி (வேது) பிடித்தால் பலன் கிடைக்கும். தும்பைப்பூவையும் ஆடுதீண்டாப்பாளை விதையையும் சேர்த்து அரைத்துபாலில் போட்டுகுடித்து வந்தால்ஆண்மை அதிகரிக்கும். இதேபோல் பூவுடன் கர்ப்பப்பை தொடர்பான நோயால் பாதிக்கப்படுபவர்கள் வெள்ளாட்டுப் பால் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி பாலை மட்டும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 40 நாள்கள் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். 20 பூக்களுடன் 5 கிராம் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பைக் கட்டிகள் கரையும். இலையுடன் உத்தாமணி எனப்படும் வேலிப்பருத்தி இலை சம அளவு எடுத்துக் கோலிக்காய் அளவு பால் சேர்த்துக் குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.


தும்பை இலைச்சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு போன்றவற்றில் தனித்தனியாக சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் சரியாகும். செடியை அரைத்துத் தேமல் உள்ள இடங்களில் தொடர்ந்து பூசி வந்தால் குணம் கிடைக்கும். கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாக தும்பை இலைகளை அரைத்து, மேல் பூச்சாகப் பூச வேண்டும். 5 நாள்கள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். இலைச்சாற்றுடன் சோற்றுப்பு கலந்து கரைந்து சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசி உலர்ந்ததும் குளித்து வந்தால் பலன் கிடைக்கும். தும்பையை நீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், மாந்தம் ஆகியவை நீங்கும். இலைச் சாற்றுடன் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்க வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும். கொப்புளம், நமைச்சல், சிரங்கு போன்றவை குணமாக இலைகளை மையாக அரைத்து ஐந்து நாள்கள் பூசி வர வேண்டும். தும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவு சேர்த்து அரைத்து பாக்கு அளவு எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்ந்து தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை குணமாகும். பாம்பு கடித்து விட்டால் ஒரு கைப்பிடி இலைகளை எடுத்து நசுக்கி அதன் சாற்றைக் குடித்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று சொட்டு சாற்றை மூக்கிலும் விட வேண்டும். இதனால் பாம்புக்கடி பட்டவர் மயக்கம் தெளிவதோடு சீக்கிரம் விஷம் முறியவும் வாய்ப்பு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக