தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2017 -18 -ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப்
படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மே 31 -ஆம் தேதி வரை... பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ள இந்த மாணவர் சேர்க்கைக்கு மே 31 -ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பம்: இந்தப் படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் திங்கள்கிழமை (மே 15) முதல் தொடங்கின. இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களுடன் "தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600051' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும்.
கட்டணம் எவ்வளவு? தாழ்த்தப்பட்ட, பழங்குடினருக்கு ரூ.350, பிற வகுப்பினருக்கு ரூ.700 என விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படிப்புக்கும் தனித் தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் மாதம் 30 -ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
கூடுதல் இடங்கள்: இந்த கல்வியாண்டில் 80 கூடுதல் இடங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
சென்னை, திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தலா 20 இடங்களும், ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 20 இடங்களும் என மொத்தம் 80 கூடுதல் இடங்களுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் நிலையில், இந்தக் கல்வியாண்டிலேயே கூடுதல் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.
புதிய பாடத் திட்டம்: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத்திட்டத்தின்படி, இந்தப் படிப்புக்கான காலம் 6 மாதம் அதிகரிக்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக