ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்.

புதுடில்லி: அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், பல மாற்றங்களுடன் நிதி மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்த, 10 அம்சங்கள்:1.ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கான வருமான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் வருபவர்களுக்கு இதன் மூலம், 12,500 ரூபாய் வரித் தொகையில் குறையும். இதேபோல், ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 12,900 ரூபாயும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 14,806 ரூபாயும் வருமான வரி குறையும்.
புதிய வருமான வரி படிவம்
2. தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர்த்து, ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள், வருமான வரி கணக்கு செலுத்த, ஒரே ஒரு பக்கம் கொண்ட படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யபவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யாது.
3. 2017 - 18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக, 2018 டிசம்பர் 31ம் தேதி தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டால், அபராத தொகை உயரும். எனினும், ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் தாமதமாக தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
4. ராஜிவ்காந்தி பங்கு சந்தை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யபவர்கள், அந்த தொகையை வருமான வரி கணக்கில் காட்டி கழித்து கொள்ளலாம் என, 2012 - 13ல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், 2018 -19 நிதியாண்டுக்கு பிறகு இந்த சலுகை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அசையா சொத்து முதலீடு
5. அசையா சொத்துக்களில் முதலீடு செய்பவர்கள், அவற்றுக்கு வரி செலுத்தாமல் மூன்று ஆண்டுகள் வரை வைத்து இருக்கலாம் என்ற நடைமுறை முன்பு இருந்தது. தற்போது, அது, இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அசையா சொத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்க, 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.
6. நீண்டகால முதலீடுகள் மூலம் லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கும் புது சிக்கல் வந்துள்ளது. இதற்கான அடிப்படை ஆண்டு, 1981 ஏப்ரல், 1ம் தேதியில் இருந்து, 2001 ஏப்ரல், 1ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. 
7. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமான நகாய், ஆர்.இ.சி., ஆகியவற்றின் பத்திரங்களில் முதலீடு செய்யபவர்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை மேலும் சில பத்திரங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
8. மாத வாடகையாக, 50,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் தனி நபர்கள், 5 சதவீத டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக தொகையை வாடகையாக பெறுபவர்களில் ஏராளமானோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இது, வரும் ஜூன், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஆதார் கட்டாயம்

9.ஜூலை, 1ம் தேதி முதல் பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களும், வருமான வரி கணக்கு செலுத்துபவர்களும் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரொக்க பண பரிமாற்ற அளவு, இரண்டு லட்சம் ரூபாய் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெறுபவர்கள், அதற்காக எந்த வரியையும் செலுத்த வேண்டாம். அதாவது பென்ஷன் தொகையில், 25 சதவீதம் வரை அவசர தேவைக்காக, பணி ஓய்வு பெறுபவதற்கு முன்பே திரும்ப பெறலாம். அதே போல், பணி ஓய்வு பெறும் போது, பென்ஷன் தொகையில், வரி ஏதும் இல்லாமல், 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.

இத்துடன், கார், இருசக்கர வாகனம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றுக்கான பிரிமியம் தொகை, இன்று முதல் அதிகரிக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்து இருப்பவர்கள், குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காமல் இருந்தால், அபராதம் செலுத்தும் திட்டமும், இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக