ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கட்டாயம்: தமிழக அரசு.


'நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துஉள்ளது.தமிழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத்தேர்வு இன்றி, முறையே பிளஸ் 2 மற்றும் மருத்துவ கல்லுாரி தேர்வுகள் அடிப்படையிலேயே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 
இந்நிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், எம்.டி., - எம்.டி.எஸ்., போன்ற அனைத்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. 


இது, மருத்துவ மாணவர்களுக்கும், மருத்துவத்தில் சேர உள்ள மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம், 13 அரசு கல்லுாரிகள் மற்றும் எட்டு தனியார் கல்லுாரிகளில், 1,692 இடங்கள் உள்ளன. 


இவற்றில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி, மாநில இடங்களுக்கும், நீட் மதிப்பெண் தேவை என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 
அதேபோல, நிகர்நிலை பல்கலை உள்பட அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளுக்கும், தமிழக அரசே கவுன்சிலிங் நடத்தி, மாணவர்களை சேர்க்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரை, தனியார் கல்லுாரிகளின் ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைகளின் இடங்களுக்கு, சுயமாகவே மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, மார்ச், 29ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; ஏப்., 4 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஏப்., 7 வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் இந்த அறிவிப்பால், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், நீட் கட்டாயமாகும் என்பது உறுதி ஆகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக