வெள்ளி, 12 மே, 2017

உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வான 187 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

        அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட 187 பேருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று பணிநியமன ஆணைகளைவழங்கினார்.


இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மாணவ, மாணவியர் தொடர் கல்வி மூலம் சிறப்பான கல்வி அறிவு பெற்று பொருளாதாரத்திலும், சமூகத்திலும் வளர்ந்த நிலை அடைவதற்கு உயர்கல்வி இன்றியமையாதது ஆகும்.இதனைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளை துவக்குவது, மாணாக்கர்கள் சிறப்பானதொரு சூழ்நிலையில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், நிர்வாகக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், விடுதிகள் கட்டுவது, அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளர் / உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது போன்ற பணிகளை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்வதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, 22.10.2016 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களின் சரிபார்ப்பும் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 187 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 11 நபர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பணிநியமன ஆணைகளை வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக