கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு
நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு
குறையும்.
இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.
இதற்கு நீர்கடுப்பு எனும் நீர்சுருக்கு நோய் என்று பெயர்.
காரணம் என்ன?
கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது.
நோய்க்கான அறிகுறிகள்
நீர் கடுப்ப எனும் நீர்சுருக்கு உள்ளவர்களுக்கு சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாகப் போக வேண்டும் என்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.
அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.
கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.
அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
மருந்துகள்
ஆயுர்வேதத்தில் மூத்திரத்தைக் கபத்தின் அம்சமாகக் கருதுவார்கள். மூத்திர அழற்சி என்பது சாம மூத்திரம் எனப்படும். இங்கு ஆமத் தன்மையுடைய கபம் சிறுநீரைத் தாக்கும். அதனால் கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை இளநீரில் சேர்த்துச் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இளநீர் ஆகாது.
நெருஞ்சி முள், தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி ஒரு பாட்டிலில் நிறைத்து அடிக்கடி குடித்து வந்தால் பழுப்பணுக்கள் வெளியேறும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கச் சிறுநீர் எரிச்சல், சுருக்கு நீங்கும்.
பரங்கி விதை 4-8 வரை எடுத்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடச் சிறுநீரக அழற்சி தணியும்.
மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும்.
# விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டி போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
வாழைத் தண்டின் நீரைப் பருக நீர்ச் சுருக்கு, நீர் கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி ஆகியவற்றிலிருந்து குணம் கிடைக்கும்.
கீரை வகைகளில் பசலைக் கீரை நீர் சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்லது. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, புதினா போன்றவை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை.
சிறுநீர் எரிச்சல் நீங்க சீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக