வியாழன், 6 ஏப்ரல், 2017

வெயில் தாக்கம்: பள்ளிகளுக்கு முன்கூட்டியே லீவு?

கோடை வெயிலின் உச்சத்தால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கும், 
தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 29 வரை தேர்வு நடத்தி, அதன்பின், விடுமுறை அறிவிக்க, திட்டமிடப்பட்டிருந்தது. 

திட்டம் : ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முன்கூட்டியே கோடை விடுமுறை விட, தனியார் பள்ளிகள் திட்டமிட்டன. பல பள்ளி வளாகங்களில், 'வர்தா' புயலால், மரங்கள் விழுந்து, நிழல் இல்லாமல், வெட்ட வெளியாக காணப்படுகின்றன. இதனால், வகுப்பறைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதேபோல், பெரும்பாலான மாவட்டங் களில், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளிக்க முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் அவதிப்படுகின்றன. இந்த காரணங்களை பள்ளிகள் முன் வைத்ததால், கோடை விடுமுறையை முன்கூட்டியே விட,கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர். 

தேர்வுகள் : எனவே, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், ஏப்., 14க்குள் விடுமுறையை அறிவிக்க முடிவு செய்து, தேர்வுகளை விரைவுபடுத்தியுள்ளன. பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன் தினம் தேர்வுகள் துவங்கின. ஏப்., 21ல், தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படுகிறது. 

தொடக்க பள்ளிகள் தவிப்பு : தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். இதனால், ஏப்., 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''கோடை வெயிலை கருதி, தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை விட, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த பள்ளிகள், பெரும்பாலும் கிராமங்களில் இருப்பதால், மாணவர்கள் கோடை வெயிலில், நீண்ட துாரம் வந்து செல்வது தவிர்க்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக